Home » 2 மக்கபேயர் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

2 மக்கபேயர் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

2 மக்கபேயர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

கிரேக்க வழிபாட்டுத் திணிப்பு

1சிறிது காலத்துக்குப்பின், யூதர்கள் தங்கள் மூதாதையரின் சட்டங்களைக் கைவிடும்படியும், கடவுளுடைய சட்டங்களின்படி நடப்பதை விட்டுவிடும்படியும் அவர்களைக் கட்டாயப்படுத்துமாறு ஏதன்சு நகர ஆட்சிமன்றத்தைச் சேர்ந்த ஒருவனை அந்தியோக்கு மன்னன் அனுப்பி வைத்தான்.

2மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அங்கு இருந்த கோவிலை, “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்.

3இந்தத் தீச்செயல் மக்களுக்குத் துன்பம் தருவதாயும் தாங்க முடியாததாயும் இருந்தது.

4ஏனெனில் பிற இனத்தாரின் ஒழுக்கக்கேட்டாலும் களியாட்டத்தாலும் கோவில் நிறைந்திருந்தது. அவர்கள் விலைமாதரோடு காமக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். திருஉறைவிடத்து எல்லைக்குள்ளேயே பெண்களோடு உடலுறவு கொண்டார்கள். விலக்கப்பட்ட பொருள்களையும் கோவிலுக்குள் எடுத்துச் சென்றார்கள்.

5சட்டங்கள் விலக்கியிருந்த பலிப்பொருள்களால் பீடம் நிரம்பி வழிந்தது.

6ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கவும், தங்கள் மூதாதையர் சிறப்பித்த திருவிழாக்களைக் கொண்டாடவும், யூதர்கள் என்று அறிக்கையிடவும்கூட அவர்களால் முடியவில்லை.

7மன்னனுடைய பிறந்த நாள் விழாவின் மாதாந்திரக் கொண்டாட்டங்களின் போது பலிப்பொருள்களில் பங்குகொள்ளுமாறு யூதர்கள் வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். தியனீசின் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது கொடிகளால் புனைந்த முடி அணிந்து, தியனீசின் பெயரால் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

8தாலமாய் நகர மக்களின் தூண்டுதலால் பக்கத்தில் இருந்த கிரேக்க நகரங்களுக்கு ஓர் ஆணை பிறந்தது; அந்த நகரங்களின் மக்களும் அதே முறையைக் கையாண்டு யூதர்களைப் பலிப்பொருள்களில் பங்குகொள்ளச் செய்யவேண்டும்;

9கிரேக்கப் பழக்கவழக்கங்களை ஏற்க விரும்பாதவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே அந்த ஆணை. இதனால் யூதர்களுக்கு ஏற்பட்ட துன்பம் அனைவருக்கும் தெரிந்ததே.

10எடுத்துக்காட்டாக, தங்கள் குழந்தைகளுக்கு விருந்தசேதனம் செய்த பெண்கள் இருவரை அவர்கள் கைதுசெய்தார்கள்; பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரின் மார்புகளில் கட்டித் தொங்கவிட்ட வண்ணம் அவர்களை எல்லாரும் காண நகரைச் சுற்றி ஊர்வலமாக நடத்திச் சென்றார்கள்; பின்பு நகர மதில்களின் மேலிருந்து அவர்களைத் தலைகீழாகத் தள்ளிவிட்டார்கள்.

11ஓய்வு நாளை மறைவாய்க் கடைப்பிடிக்கும் பொருட்டு அருகில் இருந்த குகையில் கூடியிருந்த மற்றும் சிலர் பிலிப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சுட்டெரிக்கப்பட்டார்கள்; ஏனெனில் ஓய்வுநாள்மீது அவர்கள் கொண்டிருந்த மதிப்பின் பொருட்டு அவர்கள் தங்களையே காத்துக்கொள்ளத் தயங்கினார்கள்.

கடவுளின் இரக்கம்

12இந்நூலைப் படிப்போர் இத்தகைய பேரிடர்களால் மனந்தளராதிருக்குமாறு வேண்டுகிறேன்; இத்தண்டனைகள் அனைத்தும் நம் மக்களை அழிப்பதற்காக ஏற்பட்டவை அல்ல; அவர்களைப் பயிற்றுவிப்பதற்காகவே என்பதை உணரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

13இறைப்பற்றில்லாதவர்களை நீண்ட நாளுக்குத் தங்கள் விருப்பம்போல விட்டுவிடாமல், உடனடியாகத் தண்டிப்பது, உண்மையில் பேரிரக்கத்தின் அடையாளமாகும்.

14ஏனெனில் ஆண்டவர் பிற இனத்தாருடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும்பொருட்டுப் பாவங்களின் முழு அளவை அவர்கள் அடையும்வரை பொறுமையுடன் காத்திருக்கிறார்; ஆனால் நம்மிடம் அவ்வாறு நடந்து கொள்வதில்லை;

15நம்முடைய பாவங்கள் முழுஅளவை அடையுமுன்னரே நம்மைத் தண்டித்து விடுகிறார்.

16ஆகவே அவர்தம் சொந்த மக்களாகிய நமக்கு இரக்கம் காட்டத் தவறுவதில்லை; பேரிடர்களால் நம்மைப் பயிற்றுவித்தாலும் நம்மைக் கைவிடுவதில்லை.

17இவ்வுண்மையை நினைவுபடுத்தவே இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறினோம்; இனிமேல் தொடர்ந்து வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு வருவோம்.

எலயாசரின் மறைசாட்சி இறப்பு

18தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடைய வருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

19ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதைவிட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.

20உயிர்மேல் ஆசை இருப்பினும், திருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல் தள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும்.

21சட்டத்திற்கு எதிரான அந்தப் பலிவிருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள் அவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக அவரை ஒதுக்கமாக அழைத்துச் சென்று, அவர் உண்ணக்கூடிய இறைச்சியை அவரே தயாரித்துக் கொண்டுவருமாறும், மன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை உண்பதுபோல நடிக்குமாறும் அவரைத் தனிமையில் வேண்டிக்கொண்டார்கள்.

22இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும், அவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக மனிதநேயத்தோடு நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள்.

23ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும் முதுமைக்குரிய மேன்மைக்கும் நரைமுடிக்குரிய மாண்புக்கும் சிறு வயதுமுதல் தாம் நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும் கடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி மேலான முறையில் உறுதிபூண்டவராய், உடனே தமது முடிவைத் தெரிவித்துத் தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார்.

24அவர் தொடர்ந்து, “இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல; ஏனெனில் தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும்.

25குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதுமாகும்.

26மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தாலும், நான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப முடியாது.

27ஆகவே இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என் முதுமைக்கு நான் தகுதியடையவன் என் மெய்ப்பிப்பேன்;

28மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும் பெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச்செல்வேன்” என்றார். இதெல்வாம் கூறி முடித்ததும் அவர் சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.

29சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள் இப்போது கல்நெஞ்சராய் மாறினார்கள்; ஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத் தோன்றியது.

30அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி, “நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக்கொள்கிறேன்; ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்” என்றார்.

31இவ்வாறு, எலயாசர் உயிர்துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கியது.


6:2 1 மக் 1:46,54.
6:10 1 மக் 1:60-61.
6:11 1 மக் 2:32-38.
6:18 லேவி 11:7-8.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks