back to top
HomeTamil Mass Readingதிருப்பலி வாசகங்கள் - அக்டோபர் 30, 2026

திருப்பலி வாசகங்கள் – அக்டோபர் 30, 2026

பொதுக்காலம் 30ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்குண்டு. கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.

மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.

அல்லது: அல்லேலூயா.

1நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.2ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். – பல்லவி

3அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.4அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். – பல்லவி

5அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;6வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்

ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.

இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

பிறகு அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர்-2026 நவ ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24 31
Archive 2026 2027
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks