பொதுக்காலம் 3ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29
அந்நாள்களில்
தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: “என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே!
என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்! ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் ‘படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்’ என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.
ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! ‘நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்’ என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத் தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத் துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை!
இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 132: 1-2. 3-5. 11. 12. 13-14 (பல்லவி: லூக் 1: 32)
பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவர் அவருக்கு அளிப்பார்.
3‘‘ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஓர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,4என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்;5என் கண்களைத் தூங்கவிடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்” என்று அவர் சொன்னாரே. – பல்லவி
11ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: “உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். – பல்லவி
12உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்”. – பல்லவி
13ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.14இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 119: 105
அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25
அக்காலத்தில்
இயேசு மக்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.