பொதுக்காலம் 12ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
சீயோன் மகளே! ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுக!
புலம்பல் நூலிலிருந்து வாசகம் 2: 2, 10-14, 18-19
ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.
மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்; அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்; சாக்கு உடை உடுத்தியுள்ளனர்; எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.
என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது!
என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்! அவர்கள் தங்கள் அன்னையரிடம், ‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’ என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப் போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர் விட்டவர் போல் ஆகின்றனர்!
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப் போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?
உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்; நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் சொல்லவில்லை; அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!
அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!
எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெரு முனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 74: 1-2. 3-4. 5-7. 20-21 (பல்லவி: 19b)
பல்லவி: சிறுமைப்படும் உம் மக்களின் உயிரை மறந்துவிடாதீர் ஆண்டவரே!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17
அக்காலத்தில்
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.
நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.
இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.
இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.
பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.