Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2026

திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 19, 2026

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 24ஆம் வாரம் – சனி

முதல் வாசகம்

அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49

சகோதரர் சகோதரிகளே,

“இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?” என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.

இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும். அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டு என்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு. மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார்.

தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.

எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 56: 9. 10-11. 12-13 (பல்லவி: 13b)

பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!

9நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். – பல்லவி

10கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன்.11கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? – பல்லவி

12கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.13ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

அக்காலத்தில்

பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2026 அக் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2026 2027
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.