பிங்கென் நகர் புனித ஹில்டெகார்ட் – கன்னியர், மறைவல்லுநர் (வி.நினைவு)
புனித ராபர்ட் பெல்லார்மின் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
பிங்கென் நகர் புனித ஹில்டெகார்ட் – கன்னியர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
அன்பு சாவைப் போல் வலிமை மிக்கது.
இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 8: 6-7
உம் நெஞ்சத்தில் இலச்சினை போல் என்னைப் பொறித்திடுக; இலச்சினை போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப் போல் வலிமை மிக்கது; அன்பு வெறி பாதாளம் போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.
பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது; அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரி இறைக்கலாம்; ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10, 11 காண்க)
பல்லவி: கருத்தாய்க் கேளாய் மகளே! மன்னர் உன் எழிலில் நாட்டம் கொள்வார்.
அல்லது: (மத் 25: 6): இதோ மணமகன் வருகின்றார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.
13அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.14பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். – பல்லவி
15மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.16உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 8
அல்லேலூயா, அல்லேலூயா! தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள்.
முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.
அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.