Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 16, 2027

திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 16, 2027

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோல் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 1-10

பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப் பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு; உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு; உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டிவிடு; உன் முளைகளை உறுதிப்படுத்து. வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்; உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக்கொள்வர்; பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.

அஞ்சாதே, நீ அவமானத்திற்கு உள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்க மாட்டாய். ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; ‘உலக முழுமைக்கும் கடவுள்’ என அவர் அழைக்கப்படுகின்றார்.

ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவிபோலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என் முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றும் உள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்கமாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;

1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். – பல்லவி

4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. – பல்லவி

10ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.11aநீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;12bஎன் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவான் ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்யும் தூதர்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30

யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு, இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப் பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகைகளில் அல்லவா இருக்கின்றனர்! பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

‘இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என இவரைப் பற்றித்தான் மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர்-2027 ஜன ►
ஞா 5 12 19 26
தி 6 13 20 27
செ 7 14 21 28
பு 1 8 15 22 29
வி 2 9 16 23 30
வெ 3 10 17 24 31
4 11 18 25
Archive 2027 2028
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.