மரியாவின் திருப்பெயர்
முதல் வாசகம்
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7
சகோதரர் சகோதரிகளே,
காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55 (பல்லவி: 49)
பல்லவி: வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
அல்லது: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.
48ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.49ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். – பல்லவி
50-51அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். – பல்லவி
52-53வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். – பல்லவி
54-55மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 1: 45
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-47
அக்காலத்தில்
மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்பொழுது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.