பொதுக்காலம் 19ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
வலிமை பெறு; துணிவு கொள்; ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்கு, இம்மக்களோடு நீ செல்லவேண்டும்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 31: 1-8
மோசே பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்: அவர் சொன்னது: “இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், ‘நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார். உன் கடவுளாகிய ஆண்டவரே உன் முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய். ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான். எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல – அவர்களை அழித்ததுபோல – ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார். ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். வலிமை பெறு; துணிவு கொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்.”
பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: “வலிமை பெறு; துணிவு கொள்; இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்ல வேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். ஆண்டவரே உனக்கு முன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார். அஞ்சாதே, திகைக்காதே!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
இச 32: 3-4a. 7. 8. 9,12 (பல்லவி: 9)
பல்லவி: ஆண்டவருடைய உரிமைச் சொத்து அவர்தம் மக்களே!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 29ab
அல்லேலூயா, அல்லேலூயா! என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10-14
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:
“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் மானிடமகன் நெறி தவறியோரை மீட்கவே வந்தார்.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதை விட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.