Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 29, 2025

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 29, 2025

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

பொதுக்காலம் 21ஆம் வாரம் – வெள்ளி

நற்செய்தி வாசகம் புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

நீங்கள் தூயோர் ஆவதே கடவுளுடைய திருவுளம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8

சகோதரர் சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளையை நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் தூயோர் ஆவதே கடவுளுடைய திருவுளம்; பரத்தைமையை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும். கடவுளை அறியாத பிற இனத்தாரைப் போன்று நீங்கள் கட்டுக்கடங்காப் பாலுணர்வுக்கு இடம் கொடுக்கலாகாது. இதில் எவரும் தவறிழைத்துத் தம் சகோதரரை வஞ்சிக்கக் கூடாது. ஏனெனில் இத்தகைய செயல்கள் அனைத்தையும் ஆண்டவரே தண்டிப்பார். இதை நாங்கள் முன்னமே உங்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்; எச்சரித்தும் இருக்கிறோம். கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார். எனவே இக்கட்டளைகளைப் புறக்கணிப்போர், மனிதரை அல்ல, தம்முடைய தூய ஆவியை உங்களுக்கும் அளிக்கும் கடவுளையே புறக்கணிக்கின்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1,2b. 5-6. 10. 11-12 (பல்லவி: 12a)

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!2bநீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். – பல்லவி

5ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.6வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. – பல்லவி

10தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்; பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார். – பல்லவி

11நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.12நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைத்து அவரைப் புகழுங்கள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29

அக்காலத்தில்

ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.

ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.

ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.

அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான்.

அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.

உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.

இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.

இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2025 செப் ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2025 2026
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.