பொதுக்காலம் 9ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
நற்செய்தித் தொண்டனுக்குரிய பணியை ஆற்று.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8
அன்புக்குரியவரே,
கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு. ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள். நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு; துன்பத்தை ஏற்றுக்கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய். ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 71: 8-9. 14-15ab. 16-17. 22 (பல்லவி: 15)
பல்லவி: ஆண்டவரே! என் வாய் உமது மீட்பை எடுத்துரைக்கும்.
14நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.15abஎன் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும். – பல்லவி
16தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.17கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். – பல்லவி
22என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மற்ற எல்லாரையும் விட இந்த ஏழைக் கைம்பெண் மிகுதியாகப் போட்டார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில்
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.