பொதுக்காலம் 9ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
நாம் இயேசுவோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-15
அன்பிற்குரியவரே,
தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: ‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.’ இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து. வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு. நீ கடவுள் முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: 4a)
பல்லவி: உம் பாதைகளை ஆண்டவரே, நான் அறியச் செய்தருளும்.
8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.9எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். – பல்லவி
10ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 119: 34
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில்
மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.