தூய காவல் தூதர்கள்
முதல் வாசகம்
என் தூதர் உனக்கு முன் செல்வார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23a
ஆண்டவர் கூறுவது:
வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 91: 1-2. 3-4. 5-6. 10-11 (பல்லவி: 11)
பல்லவி: உம்மைக் காத்திட, தம் தூதர்க்கு ஆண்டவர் கட்டளையிடுவார்.
3ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.4அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். – பல்லவி
5இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர்.6இருளில் உலவும் கொள்ளைநோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். – பல்லவி
10ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது.11நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 103: 21
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.