பொதுக்காலம் 26ஆம் வாரம் – வெள்ளி
முதல் வாசகம்
காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?
யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4
ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:
உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே! முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று. அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும்.
கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!
ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ? அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!
யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 139: 1-3. 7-8. 9-10. 13-14ab (பல்லவி: 24b)
பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.
7உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?8நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! – பல்லவி
9நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,10அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். – பல்லவி
13ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!14abஅஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 103: 21
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.