பொதுக்காலம் 9ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
இறைப்பற்றுடன் வாழத் தேவையான எல்லாவற்றையும் நமக்கு அருளியுள்ளார்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7
நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினால் விளைந்த ஏற்புடைமையின் அடிப்படையில் எங்களைப் போன்ற மதிப்புயர்ந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு எழுதுவது: கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக!
தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார். அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப் பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் தம் இறை வல்லமையால் நமக்கு அருளியுள்ளார். தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகை விட்டு விலகியோடி இறைத் தன்மையில் பங்கு பெறுங்கள்.
இதற்கென்றே கடவுள் நமக்கு உயர் மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப் பற்றும், இறைப் பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 91: 1-2. 14-15ab. 15c-16 (பல்லவி: 2b)
பல்லவி: ஆண்டவரே, நீரே நான் நம்பியிருக்கும் இறைவன்.
14‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்;15abஅவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன். – பல்லவி
15cஅவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்.16நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 1: 5ab
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அன்பு மகனைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12
அக்காலத்தில்
இயேசு உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: “ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
பருவ காலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.
இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்’ என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.
‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று’ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?” என்று அவர் கேட்டார்.
தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழி தேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.