பொதுக்காலம் 10ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
பர்னபா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 21b-26; 13: 1-3
அந்நாள்களில்
பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.
அந்தியோக்கியத் திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர்.
அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர் மீது வைத்துத் திருப்பணியில் அமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9c)
பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.
6மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். – பல்லவி
7மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். – பல்லவி
8எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர். – பல்லவி
9நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 25: 4c, 5a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.