யோனா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
நினிவேயில் யோனா
1இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
2அவர், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார்.
3அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும்.
4யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார்.
5நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.
6இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்.
7மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். “இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.
8மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.
9இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.”
10கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.