1 கொரிந்தியர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

1 கொரிந்தியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

4. சிலைகளுக்குப் படைக்கப் பட்டவற்றை உண்ணுதல்

1இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைக் குறித்துப் பார்ப்போம். நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால், அன்பு உறவை வளர்க்கும்.

2தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறிய வேண்டிய முறையில் எதையும் அறிந்து கொள்ளவில்லை.

3கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்.

4இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்; ‘இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை’ என்று நமக்குத் தெரியும்.

5விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்; தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர்.

6ஆனால், நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.

7ஆனால், இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச் சான்று வலுவற்றதாயிருப்பதால் அது கறைபடுகிறது.

8நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்காது. உண்ணாதிருப்பின் அதனால் ஒரு குறையுமில்லை. உண்போமாயின் அதனால் ஒரு நிறைவுமில்லை.

9ஆனால், உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

10‘அறிவு’ கொண்டுள்ள நீங்கள் சிலைவழிபாட்டுக் கோவிலில் பந்தியமர்ந்திருப்பதை வலுவற்ற மனச்சான்று உடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் காண்பாரானால் அவரும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்ணத் தூண்டப் பெறுவாரல்லவா?

11இவ்வாறு, இந்த ‘அறிவு’ வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா?

12இவ்வாறு, நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.

13ஆகையால், என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ணமாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்கமாட்டேன்.


8:6 உரோ 11:36; எபே 4:6.
8:7 எபி 13:9.
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post