தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
முதல் வாசகம்
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.
இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும்.
உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 9-16b
சகோதரர் சகோதரிகளே,
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறை வேண்டலில் நிலைத்திருங்கள்; வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 6b)
பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 1: 45
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56
அக்காலத்தில்
மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,
“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.