பொதுக்காலம் 21ஆம் வாரம் – சனி
முதல் வாசகம்
வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடைவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 33: 12-13. 18-19. 20-21 (பல்லவி: 12b)
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். – பல்லவி
20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29
அக்காலத்தில்
ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.
அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான்.
அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.