நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு)
நாரெக் நகர் புனித கிரகோரியார் – ஆதீனத் தலைவர், மறைவல்லுநர்
முதல் வாசகம்
அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 10-12a
யோவானாகிய நான் விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை.
இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 37: 3-4. 5-6. 30-31 (பல்லவி: 30a)
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.6உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். – பல்லவி
30நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.31கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. – பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 6: 63b, 68b
ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
நற்செய்தி வாசகம்
அதிகாரத்தோடு அவர்களுக்கு இயேசு கற்பித்தார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.