பொதுக்காலம் 12ஆம் வாரம் – வியாழன்
முதல் வாசகம்
ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 1-12, 15-16
அந்நாள்களில்
ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார். ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.
அப்பொழுது சாராய் ஆபிராமிடம், “எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்” என்றார். ஆபிராம் சாராயிடம், “உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்” என்றார். இதற்குப் பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.
ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, “சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்” என்றாள்.
ஆண்டவரின் தூதர் அவளிடம், “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட” என்றார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், “உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்” என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.
ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 16: 6b-12, 15-16
அந்நாள்களில்
ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது. அவர் அவளை நோக்கி, “சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்” என்றாள்.
ஆண்டவரின் தூதர் அவளிடம், “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட” என்றார். பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், “உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்” என்றார். மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார். ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லாரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.
ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 106: 1-2. 3-4a. 4b-5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
3நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!4aஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! – பல்லவி
4bஅவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்!5நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.