Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 12, 2026 – வ2

திருப்பலி வாசகங்கள் – டிசம்பர் 12, 2026 – வ2

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

புனித குவாதெலுப் அன்னை

நினைவுக்காப்பு
இவ்வாசகம் தூய கன்னி மரியா – பொது தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று தேவைக்கிணங்க, தூய கன்னி மரியா – பொது தொகுப்பிலுள்ள வேறு வாசகத்தை பயன்படுத்தலாம்.

முதல் வாசகம்

வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19a; 12: 1, 3-6a, 10ab

விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.

வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையில் இருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது.

எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

யூதி 13: 18ab. 19-20a (பல்லவி: 15: 9d)

பல்லவி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!

18abமகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! – பல்லவி

19கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.20aஇதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.

இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.

வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர்-2026 ஜன ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
ச 5 12 19 26
Archive 2026 2027
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.