புனித தனிஸ்லாஸ் – ஆயர், மறைச்சாட்சி
முதல் வாசகம்
அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 10-12a
விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர் மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை.
இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)
பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.
3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். – பல்லவி
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். – பல்லவி
7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 1: 3b-4a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இரக்கம் நிறைந்த தந்தையாம் கடவுளைப் போற்றுவோம். அவரே இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
உலகம் அவர்களை வெறுக்கிறது.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19
அக்காலத்தில்
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான். இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.
உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.
நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.