Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 8, 2027 – வ3

திருப்பலி வாசகங்கள் – பிப்ரவரி 8, 2027 – வ3

புனித ஜோஸ்பின் பக்கீத்தா – கன்னியர் (வி.நினைவு)

இவ்வாசகம் கன்னியர் – பொது தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று தேவைக்கிணங்க, கன்னியர் – பொது அல்லது புனிதர், புனிதையர் – பொது (துறவியர்) தொகுப்பிலுள்ள வேறு வாசகத்தை பயன்படுத்தலாம்.

முதல் வாசகம்

மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கின்றனர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-35

சகோதரர் சகோதரிகளே,

மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்கு உரியவனாயிருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.

மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப் படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது.

மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.

உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10, 11 காண்க)

பல்லவி: கருத்தாய்க் கேளாய் மகளே! மன்னர் உன் எழிலில் நாட்டம் கொள்வார்.

அல்லது: (மத் 25: 6): இதோ மணமகன் வருகின்றார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

10
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11
உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! – பல்லவி

13
அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.
14
பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். – பல்லவி

15
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.
16
உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழித்திருப்பதாக ஆண்டவர் கண்ட அறிவாற்றல் உள்ள கன்னிப் பெண் இவரே; ஆண்டவர் வரவே, அவர் அவரோடு மண வீட்டில் நுழைந்து விட்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள கன்னித் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள்.

முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.

அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி-2027 மார் ►
ஞா 7 14 21 28
தி 1 8 15 22
செ 2 9 16 23
பு 3 10 17 24
வி 4 11 18 25
வெ 5 12 19 26
6 13 20 27
Archive 2027 2028
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks