Home » Tamil » கலாத்தியர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

கலாத்தியர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

கலாத்தியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

3. கொள்கைப் பகுதி

நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆதல்

1அறிவிலிகளான காலத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா?

2உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்; நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

3தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?

4நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத் தான் முடியுமா?

5உங்களுக்குத் தூய ஆவியை அளித்து உங்களிடயே வல்ல செயல்களை ஆற்றுபவர் எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்? நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?

6ஆபிரகாமைப் பாருங்கள்!

“அவர் கடவுள்மீது நம்பிக்கை
கொண்டார்; அதைக் கடவுள்
அவருக்கு நீதியாகக் கருதினார்.”

7ஆகவே நம்பிக்கைகொண்டு வாழ்பவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

8நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல்,

“உன் வழியாக மக்களினங்கள்
அனைத்தும் ஆசி பெறும்”

என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது.

9ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில் நம்பிக்கை கொள்வோரும் பங்குபெறுவர்.

சட்டத்தின் விளைவு: சாபம்

10திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில்,

“திருச்சட்டத்தின் வார்த்தைகளை

எல்லாம் கடைப்பிடித்து நடவாதோர்

சபிக்கப்படட்டும்!”

என்று எழுதியுள்ளது.

11சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு. ஏனெனில், “நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்.”

12திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக,

“சட்டம் சார்ந்தவற்றைக்

கடைப்பிடிப்போர்

அவற்றால் வாழ்வு பெறுவர்”

என்று எழுதியுள்ளது.

13“மரத்தில் தொங்கவிடப்பட்டோர்

சபிக்கப்பட்டோர்”

என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார்.

14ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் பிற இனத்தார்க்கும் கிடைக்கவும் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக் கொள்ளவுமே இவ்வாறு செய்தார்.

திருச்சட்டமும் வாக்குறுதியும்

15சகோதர சகோதரிகளே. உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக் காட்டுத் தருகிறேன். மனிதர் முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை யாரும் செல்லாததாக்கவோ அதனுடன் எதையும் சேர்க்கவோ முடியாது.

16வாக்குறுதிகள்ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் தரப்பட்டன. பலரைக் குறிக்கும் முறையில் ‘வழி மரபினர்களுக்கு’ என்று இல்லாமல் ஒருவரையே குறிக்கும் முறையில் ‘உன் மரபினருக்கு’ என்று உள்ளது. அந்த மரபினர் கிறிஸ்துவே.

17என் கருத்து இதுவே; கடவுள் ஏற்கெனவே முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிட முடியாது; அவரது வாக்குறுதியைப் பொருளற்றதாக்கி விடவும் முடியாது.

18திருச்சட்டம் சார்ந்த செயல்களால் உரிமைப்பேறு கிடைப்பதாய் இருந்தால் அது வாக்குறுதியால் தரப்படுவது இல்லை என்றாகிறது. ஆனால், கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார்.

19அப்படியானால் திருச்சட்டத்தின் பயன் என்ன? குற்றங்களை எடுத்துக்காட்ட அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதிக்கு உரியவரான வழிமரபினர் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது. வானதூதர்கள் மூலம் அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் வழியாய்க் கொடுக்கப்பட்டது.

20நேரிடையாய் ஒருவர் செயலாற்றும்போது இணைப்பாளருக்கு இடமில்லை. வாக்குறுதி அருளியபோது கடவுள் ஒருவரே நேரிடையாய்ச் செயல்பட்டார்.

அடிமைகளும் உரிமை மக்களும்

21அப்படியானால், திருச்சட்டம் கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருபோதும் இல்லை. வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் வழியாகவே மனிதர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகியிருக்கலாம்.

22ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.

23நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது.

24இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது.

25இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை.

26ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.

27அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.

28இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.

29நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.


3:6 தொநூ 15:6; உரோ 4:3.
3:7 உரோ 4:16.
3:8 தொநூ 12:3.
3:10 இச 27:26.
3:11 அப 2:4; உரோ 1:17.
3:12 லேவி 18:5.
3:13 இச 21:23.
3:16 தொநூ 12:7.
3:17 விப 12:40.
3:18 உரோ 4:14.
3:29 உரோ 4:13.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more