பொதுக்காலம் 17ஆம் வாரம் – திங்கள்
முதல் வாசகம்
தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11
ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.” ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.
எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: “நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து வை.” ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்து வைத்தேன்.
பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.” அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை” என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
இச 32: 18-19, 20-21 (பல்லவி: 18a)
பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35
அக்காலத்தில்
இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.”
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.”
இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.