பொதுக்காலம் 18ஆம் வாரம் – செவ்வாய்
முதல் வாசகம்
உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2, 12-15, 18-22
ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது. உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பது போல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்க முடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள் மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும். அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுறமாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலைநாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன். அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகி வருவான்; ஏனெனில், என்னை அணுகி வர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 102: 15-17. 18-20. 28,21-22 (பல்லவி: 16)
பல்லவி: ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 49b
அல்லேலூயா, அல்லேலூயா! “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2, 10-14
அக்காலத்தில்
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர்.
மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, “நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்” என்றார்.
பின்பு சீடர் அவரை அணுகி, “பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?” என்றனர். இயேசு மறுமொழியாக, “என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.