பொதுக்காலம் 13ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்
நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 5: 14-15, 21-24
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார். தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்; நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார்.
“உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும் போது நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 50: 7. 8-9. 10-11. 12-13. 16bc-17 (பல்லவி: 23b)
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.
8நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.9உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. – பல்லவி
10ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை.11குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. – பல்லவி
12எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை; ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே.13எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக் கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ? – பல்லவி
16bcஎன் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?17நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
குறித்த காலம் வருமுன்னே, எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34
அக்காலத்தில்
இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என்று கத்தினார்கள்.
அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்” என்று வேண்டின. அவர் அவற்றிடம், “போங்கள்” என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.