புனித முதலாம் யோவான் – திருத்தந்தை, மறைச்சாட்சி
முதல் வாசகம்
நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 14b, 20-22
‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே: இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.
கேட்கச் செவியுடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
அல்லது: அல்லேலூயா.
4சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி
5என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி
6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 15: 15b
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 24-30
அக்காலத்தில்
தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், “பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்.
நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.