Home » Tamil Mass Reading » திருப்பலி வாசகங்கள் – மே 24, 2026 – பெருவிழாத் திருப்பலி

திருப்பலி வாசகங்கள் – மே 24, 2026 – பெருவிழாத் திருப்பலி

New: Download our Official Catholic Gallery App for Android & iOS

தூய ஆவி ஞாயிறு
பெருவிழாத் திருப்பலி

பெருவிழா
தூய ஆவி ஞாயிறுக்குப் பின் வரும் திங்கள் கிழமையிலும், இன்னும் செவ்வாய்க் கிழமையிலும் கூட, எங்கெல்லாம் இறைமக்கள் திரளாகத் திருப்பலிக்கு வரவேண்டுமோ, அல்லது வருவது வழக்கமோ, அங்கெல்லாம் தூய ஆவி விழாத் திருப்பலி வாசகங்களை மீண்டும் பயன்படுத்தலாம்.

அல்லது உறுதிப்பூசுதல் அளிக்கும் சடங்கு முறையிலுள்ள வாசகங்களைப் பயன்படுத்தலாம்.

முதல் வாசகம்

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30)

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

அல்லது: அல்லேலூயா.

1abஎன் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!24acஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. – பல்லவி

29bcநீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.30உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். – பல்லவி

31ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!34என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3b-7, 12-13

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

தொடர்பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே-2026 ஜூன் ►
ஞா 31 3 10 17 24
தி 4 11 18 25
செ 5 12 19 26
பு 6 13 20 27
வி 7 14 21 28
வெ 1 8 15 22 29
2 9 16 23 30
Archive 2026 2027
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Enjoy Catholic Gallery without ads!
Get our official app for daily Mass readings, prayers & more.