back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 7 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பல்வகை அறிவுரை

1தீமை செய்யாதே;

தீமை ஒருபோதும் உனக்கு நேராது.

2அநீதியை விட்டு அகன்று செல்;

அநீதியும் உன்னைவிட்டு விலகும்.

3குழந்தாய், அநீதி எனும்

நிலத்தில் விதைக்காதே;

அப்போது அதில் நீ ஏழு மடங்கு

விளைச்சலை அறுக்கமாட்டாய்.

4ஆண்டவரிடமிருந்து

உயர்நிலையைத் தேடாதே;

பெருமைக்குரிய இருக்கையை

மன்னரிடமிருந்து நாடாதே.

5ஆண்டவர் திருமுன் உன்னையே

நீதிமான் ஆக்கிக்கொள்ளாதே;

மன்னர் முன் உன்னையே

ஞானி ஆக்கிக்கொள்ளாதே.

6நடுவர் ஆவதற்கு விரும்பாதே;

அநீதியை நீக்க உன்னால்

முடியாமல் போகலாம்;

வலியவருக்கு அஞ்சி

உன் நேர்மைக்கே இழுக்கு

வருவிக்கலாம்.

7நகர மக்களுக்கு எதிராகக்

குற்றம் செய்யாதே;

மக்கள்முன் உன் பெயரைக்

கெடுத்துக்கொள்ளாதே.

8செய்த பாவத்தையே

மீண்டும் செய்யாதே;

அவற்றுள் ஒன்றாவது உனக்குத்

தண்டனை பெற்றுத் தரும்.

9‘நான் அளிக்கும் எண்ணற்ற

கொடைகளை ஆண்டவர்

கண்ணோக்குவார்;

உன்னத கடவுளுக்கு

நான் செலுத்தும் பலிகளை

ஏற்றுக்கொள்வார்’ எனச் சொல்லாதே.

10நீ மன்றாடும்போது மனம்

சோர்ந்து போகாதே;

தருமம் செய்வதைப் புறக்கணியாதே.

11கசப்புணர்வு கொண்டோரை

எள்ளிநகையாடாதே;

நம்மைத் தாழ்த்தவும் உயர்த்தவும்

வல்லவர் ஒருவர் உள்ளார்.

12பொய் புனைந்து உன்

உடன்பிறப்பை ஏமாற்றாதே;

உன் நண்பர்க்கும் அவ்வாறே

செய்யாதே.

13பொய் சொல்ல விரும்பாதே;

பொய் பேசும் பழக்கம்

நன்மை தராது.

14மூப்பர் கூட்டத்தில் உளறாதே;

நீ வேண்டும் போது

பின்னிப் பின்னிப் பேசாதே.

15கடும் உழைப்பையும்

உழவுத் தொழிலையும்

வெறுக்காதே;

இவை உன்னத இறைவனால்

ஏற்படுத்தப்பட்டவை.

16பாவிகளின் கூட்டத்தோடு

சேராதே;

கடவுளின் சினம் காலம்

தாழ்த்தாது வெளிப்படும்

என்பதை மறவாதே.

17பணிவையே பெரிதும் நாடு;

இறைப்பற்றில்லாதவர்களுக்கு

நெருப்பும் புழுக்களும்

தண்டனையாகக் கிடைக்கும்.

பிறரிடம் உறவு

18பணத்துக்காக நண்பரைக்

கைவிடாதே; உண்மையான

சகோதரனை ஓபிர் நாட்டுப்

பொன்னுக்காகவும் பண்டம் மாற்றாதே.

19ஞானமுள்ள நல்ல மனைவியை

இழந்துவிடாதே;

அவளது நன்னயம்

பொன்னைவிட உயர்ந்தது.

20உண்மையுடன் உழைக்கும் உன்

அடிமைகளுக்கும்,

தங்கள் உயிரையே

உனக்காகக் கொடுக்கும்

கூலியாள்களுக்கும்,

எவ்வகைத் தீங்கும் செய்யாதே.

21அறிவுக்கூர்மை கொண்ட

அடிமைக்கு அன்புகாட்டு;

அவனுக்கு விடுதலை

கொடுக்க மறுக்காதே.

22உன் வீட்டில் விலங்குகள்

இருந்தால் அவற்றைக்

கவனித்துக்கொள்;

அவை உனக்குப் பயன்

கொடுத்தால் அவற்றை

வைத்துக்கொள்.

23உனக்குப் பிள்ளைகள் இருந்தால்

அவர்களுக்கு நற்பயற்சி அளி;

இளமைமுதலே பணிந்திருக்கச் செய்.

24உனக்குப் பெண் பிள்ளைகள்

இருந்தால், அவர்களது கற்பில்

அக்கறை காட்டு;

அவர்களுக்கு மிகுதியாகச்

செல்லம் கொடுக்காதே.

25உன் மகளுக்குத்

திருமணம் செய்துவை;

உன் தலையாய கடமையைச்

செய்தவன் ஆவாய்.

அறிவுக்கூர்மை படைத்தவருக்கே

உன் மகளை மணமுடித்துக்கொடு.

26உன் உள்ளத்திற்கு ஏற்ற மனைவி

உனக்கு இருந்தால் அவளைத்

தள்ளி வைக்காதே;

நீ வெறுக்கும் மனைவியை

நம்பிவிடாதே.

27உன் தந்தையை உன்

முழு உள்ளத்துடன் மதித்து நட;

உன் தாயின் பேறுகாலத்

துன்பத்தை மறவாதே.

28அவர்கள் உன்னைப்

பெற்றெடுத்தார்கள்;

அதற்கு ஈடாக உன்னால்

எதையும் செய்ய முடியாது

என்பதை நினைவில் இருத்து.

29உன் முழு உள்ளத்தோடு

ஆண்டவருக்கு அஞ்சு;

அவருடைய குருக்களை மதித்து நட.

30உன்னை உண்டாக்கியவர்மீது

உன் முழு வலிமையோடும்

அன்பு செலுத்து;

அவருடைய திருப்பணியாளர்களைக்

கைவிடாதே.

31ஆண்டவருக்கு அஞ்சு;

குருக்களைப் பெருமைப்படுத்து;

குருக்களுக்குரிய பங்காகிய

முதற்கனி, குற்றம்போக்கும் பலி,

உழைப்பின் பயன், தூய்மையாக்கும் பலி,

தூய பொருள்களின்

முதற்பயன் ஆகியவற்றை

உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி

கொடு.

32ஏழைகளுக்குத் தாராளமாய்க்

கொடு;

இதனால் இறை ஆசி

முழுமையாக உனக்குக் கிடைக்கும்;

33உயிர் வாழ்வோர் அனைவருக்கும்

கனிவோடு கொடு;

உயிர் நீத்தோர்க்கும்

அன்பு காட்ட மறவாதே.

34அழுவோரைத் தவிர்க்காதே;

புலம்புவோரோடு புலம்பு.

35நோயாளிகளைச் சந்திக்கத்

தயங்காதே;

இத்தகைய செயல்

மற்றவர்களின் அன்பினை

உனக்குப் பெற்றுத் தரும்.

36எல்லாவற்றிலும் உன் முடிவை

நினைவில் கொள்;

அவ்வாறெனில் ஒருபோதும்

நீ பாவம் செய்யமாட்டாய்.


7:1 பேது 3:13.
7:5 யோபு 9:2.
7:6 லேவி 19:15.
7:9 நீமொ 21:27.
7:10 லூக் 18:1.
7:12 தொநூ 4:8.
7:14 சஉ 5:1-2; மத் 6:7.
7:15 தொநூ 3:19.
7:17 எசா 66:24.
7:21 விப 21:2; இச 15:12.
7:24-25 சீஞா 26:10-12; 42:9-11.
7:27 தோபி 4:3-4.
7:30 இச 6:5.
7:32 இச 15:8.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks