back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 55 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 55 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

காட்டிக் கொடுக்கப்பட்டவரின் மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் அறப்பாடல்)

1கடவுளே! என் மன்றாட்டுக்குச்

செவி சாய்த்தருளும்;

நான் முறையிடும் வேளையில்

உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.

2என் விண்ணப்பத்தைக் கேட்டு

மறுமொழி அருளும்;

என் கவலைகள் என் மன அமைதியைக்

குலைத்துவிட்டன.

3என் எதிரியின் கூச்சலாலும்,

பொல்லாரின் ஒடுக்குதலாலும்

நடுங்குகின்றேன்;

ஏனெனில், அவர்கள் எனக்கு

இடையூறு பல செய்கின்றனர்;

சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.

4கடுந்துயரம்

என் உள்ளத்தைப் பிளக்கின்றது;

சாவின் திகில் என்னைக்

கவ்விக்கொண்டது.

5அச்சமும் நடுக்கமும்

என்னை ஆட்கொண்டன;

திகில் என்னைக் கவ்விக்கொண்டது.

6நான் சொல்கின்றேன்;

‛புறாவுக்கு உள்ளது போன்ற

சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?

நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!

7இதோ! நெடுந்தொலை சென்று,

பாலை நிலத்தில்

தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)

8பெருங்காற்றினின்றும்

புயலினின்றும் தப்பிக்கப்

புகலிடம் தேட விரைந்திருப்பேனே!

9என் தலைவரே! அவர்களின்

திட்டங்களைக் குலைத்துவிடும்;

அவர்களது பேச்சில்

குழப்பத்தை உண்டாக்கும்;

ஏனெனில், நகரில் வன்முறையையும்

கலகத்தையும் காண்கின்றேன்’.

10இரவும் பகலும் அவர்கள்

அதன் மதில்கள் மேல் ஏறி

அதைச் சுற்றி வருகின்றனர்;

கேடும் கொடுமையும்

அதில் நிறைந்திருக்கின்றன.

11அதன் நடுவே இருப்பது அழிவு;

அதன் தெருக்களில் பிரியாதிருப்பன

கொடுமையும் வஞ்சகமுமே!

12என்னை இழித்துரைக்கின்றவன்

என் எதிரியல்ல; அப்படியிருந்தால்,

பொறுத்துக்கொள்வேன்;

எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன்

எனக்குப் பகைவன் அல்ல;

அப்படியிருந்தால், அவனிடமிருந்து

என்னை மறைத்துக்கொள்வேன்.

13ஆனால், அவன் வேறு யாரும் அல்ல;

என் தோழனாகிய நீயே;

என் நண்பனும் என்னோடு

நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.

14நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்;

கடவுளின் இல்லத்தில்

பெருங்கூட்டத்தினிடையே

நடமாடினோம்;

15என் எதிரிகளுக்குத்

திடீரெனச் சாவு வரட்டும்;

அவர்கள் உயிரோடு

பாதாளத்தில் இறங்கட்டும்;

ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில்

அவர்கள் நடுவிலேயே

தீமை புகுந்து விட்டது.

16நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்;

ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.

17காலை, நண்பகல், மாலை வேளைகளில்

நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்;

அவர் என் குரலைக் கேட்டருள்வார்.

18அணிவகுத்து என்னை

எதிர்த்து வந்தோர் மிகப் பலர்;

என்னோடு போரிட்டோர் கையினின்று

அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.

19தொன்றுதொட்டு

அரியணையில் வீற்றிருக்கும்

கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்;

அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா)

ஏனெனில், அவர்கள் தம்

நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை;

கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.

20தன்னோடு நட்புறவில்

இருந்தவர்களை எதிர்த்து

அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்;

தன் உடன்படிக்கையையும் மீறினான்.

21அவன் பேச்சு

வெண்ணெயிலும் மிருதுவானது;

அவன் உள்ளத்திலோ போர்வெறி;

அவன் சொற்கள்

எண்ணெயிலும் மென்மையானவை;

அவையோ உருவிய வாள்கள்.

22ஆண்டவர் மேல்

உன் கவலையைப் போட்டுவிடு;

அவர் உனக்கு ஆதரவளிப்பார்;

அவர் நேர்மையாளரை

ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.

23கடவுளே, நீர் அவர்களைப்

படுகுழியில் விழச்செய்யும்;

கொலைவெறியரும் வஞ்சகரும்

தம் ஆயுள் காலத்தில்

பாதிகூடத் தாண்டமாட்டார்;

ஆனால், நான்

உம்மையே நம்பியிருக்கின்றேன்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks