எசாயா அதிகாரம் – 47 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள்

1 .. 11 .. 21 .. 31 .. 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 .. 66
Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; “மெல்லியலாள் “, “இனியவள்” என்று இனி நீ அழைக்கப்படாய்.

2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை; உன் முக்காடுதனை அகற்றிவிடு; உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.

3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்; உன் மானக்கேடு வெளிப்படும்; நான் பழி வாங்குவேன்; எந்த ஆளையும் விட்டுவையேன்.

4 எங்கள் மீட்பரின் பெயர் “படைகளின் ஆண்டவர் “; அவரே “இஸ்ரயேலின் தூயவர் “.

5 மகள் கல்தேயா! இருளுக்குள் புகுந்து மௌனமாய் உட்கார்; இனி நீ “அரசுகளின் தலைவி” என அழைக்கப்படமாட்டாய்.

6 நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்; என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்; அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்; நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை; முதியோராய் இருந்தோர் மீதும் மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.

7 “என்றும் தலைவி நானே, என்றாய் நீ; இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை; பின் விளைவுபற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.

8 இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, “எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை; நான் கைம்பெண் ஆகமாட்டேன்; பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்” என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்;

9 இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்; பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.

10 உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்; “என்னைக் காண்பார் யாருமில்லை” என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன; “எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை” என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.

11 தீமை உன்மேல் திண்ணமாய் வரும்; அது தோன்றும் திக்கை நீ அறியாய்; அழிவு உன்மேல் விழும்; அதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது; நீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.

12 இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்; ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்; ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.

13 திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்; வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.

14 இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள், நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்; தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்; அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று; எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.

15 நீ முயன்று பயின்;;றவையும் இவ்வாறே அழிவுறும்; உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்; ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்; உன்னை விடுவிக்க எவரும் இரார்.

Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.